உள்ளங்களை நேசிப்பவர்கள்

Monday, May 28, 2012

சதுரகிரி மலை பயணத்தை பற்றிய பதிவு...

இது  சதுரகிரி மலை பயணத்தை பற்றிய பதிவு...

எனது நண்பர்களோடு 17.05.2012 (வியாழன்) அன்று சதுரகிரி பயணம் மேற்கொண்டோம் அதன் அனுபவங்களையும் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கத்திற்கு பணிவான எனது முதற்கண் வணக்கங்கள். 
நாங்கள் எனது நண்பரின் வாகனத்தில் காங்கேயத்தில் இருந்து சதுரகிரி  நோக்கி 8 பேர் பயணித்தோம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுந்தரமகாலிங்கம் மலை கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திறாயிருப்பு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அடிக்கடி பேருந்து, மினி பஸ் வசதி இருக்கிறது.  வத்திறாயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல வேண்டும்.  பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன.

முதலில் தாணிப்பாறை

தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை கால்நடையாக செல்ல வேண்டும்.  கிட்டத்தட்ட ஏழு முதல் பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கலாம். அருகிலுள்ள சின்ன அருவியில் குளித்து விட்டு அங்கிருக்கும் விநாயகரையும், ராஜேஸ்வரி அம்மன் கோவிலையும், கருப்பண சாமி கோவிலையும் தரிசித்து மலை மீது பயணத்தை தொடர்ந்தோம். தாணிப்பாறையிலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கடந்து வந்தால் வழுக்கு பாறை
இருக்கும் பின்பு அங்கிருந்து அரை மணி நேரம் நடக்க, ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே வந்தால் செயின் பாறை  என்ற இடம் வரும்.  இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும்.  சில நேரங்களில்  தண்ணீர் அதிகம் ஓடும்.  அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம்.
 
வழுக்கு பாறை



சங்கிலிப் பாறை



சங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும். நாங்களே கிட்டத்தட்ட மூன்று நான்கு தடவை தங்கி இளைப்பாறிச் சென்றோம்  மூச்சு வாங்கிப் போகும்.  அடுத்து ஓரளவு நல்ல பாதை இருக்கும். பசுத்தடம்என்ற இடம் வரும். இங்கு காமதேனு பசு வழி தெரியாமல் இருந்த ஒரு பக்தருக்கு வழி காட்டியதாகவும், அந்த காமதேனு பசுவின் கால் தடம் தான் பசுத்தடம் எனும் பகுதி என்று சொல்கிறார்கள்.
 



பசுத்தடம்




நமது  நண்பர்கள்

 
சிவகுமார் மற்றும் சிவராஜ்
  
ஹரி சிவகுமார்

  
செல்வகுமார்

அன்பு

 
நல்லி மனோகர்
 
தியாகு
அடுத்து ஒரு இறக்கம் இருக்கிறது. அந்த இறக்கம் உப்புத்துறையிலிருந்து (தேனி மாவட்டம்) வரும் பாதை.   

கோரக்கர் குகை
 அடுத்து நாம் நேரே மலை ஏறுவோம்.  அடுத்து வருவது கோரக்கர் குகை.  அடுத்து வருவது நாவல் ஊற்றுஎன்ற ஊற்று இருக்கும்.  குடிநீர் அதில் எடுத்துக் கொள்ளலாம்.  நீர் இனிப்பாக இருக்கும்.  வருடம் முழுவதும் நீர் இருக்கும்.  இங்கு தண்ணீர் வற்றுவதில்லை.
நாவல் ஊற்று

 

இரட்டை லிங்கம்

அடுத்து இரட்டை லிங்கம்இருக்கும்.  ஒரு லிங்கத்தில் சிவனும், ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை. 
இரட்டை லிங்கத்தை தாண்டி ஓரளவு இறக்கம் இருக்கும்.  அங்கு ஒரு சிறு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.  சற்று சரிவு பாதையில் இறங்க வேண்டும். 

பிலாவடி கருப்பசாமி கோவில்

ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம்.  நல்ல ஏற்றம் இருக்கும்.  வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்று, ஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும்.  நன்கு சில்லென்று இருக்கும்.  நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்.  எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் குளிர்ச்சியாக இருக்கும். இது அங்கு சென்று  அனுபவித்தால் தான் தெரியும்.  இந்த ஏற்றம் முடிந்தவுடன் பிலாவடி கருப்பசாமி கோவில்இருக்கும்.  பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார்.  காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.  இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொள்வோம். அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும்.  இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சந்தன மஹாலிங்கம்கோவில் இருக்கும்.  வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சுந்தர மஹாலிங்கம்கோவில் இருக்கும்.


இங்கு சித்தர் தோரண வாயில்’ – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம். இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது.  பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் இது ஒரு தனி சிறப்பு.  எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள்.  அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது.  அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள்.  அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள். 

சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம்.  இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார்.  இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.  சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம்.  முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது.  இப்போது இல்லை.  பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது.  அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம்.  அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள்.  அனைவரையும் தரிசனம் செய்து கொள்வோம். 
சந்தன மஹாலிங்கம் கோவில்



ஆகாச கங்கை அருவி

 


சுந்தர மஹாலிங்கம் கோவில்

சுந்தரனார் என்ற சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம்.  இவர் சுயம்பு லிங்கம்.  சற்று சாய்வாக இருக்கிறார்.  இங்கு விபூதி பிரசாதம் வழங்கப் படுகிறது.  இங்கு பூஜை நேரத்தில் சங்கு ஊதப்படுகிறது.  லிங்கருக்கு மேலே செப்பு கலயம் இருக்கிறது.  நாள் முழுக்க நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது.  இது ஒரு வித்தியாசமான அமைப்பு.  இது சற்று பெரிய கோவில்.  பிரகாரம் சுற்றி வரலாம்.

சதுரகிரியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள்

1.தானிப் பாறை.                
2.ஆசிர்வாத விநாயகர்.                  
3.கருப்பசாமி                    
4.குதிரைகுத்தி                                           
5.வழுக்குப் பாறை                                    
6.அத்திபூத்து                                               
7 .கோணத்தலை வாசல்                    
8.கோரக்கர்குகை                                      
9.அரிசிப்பாறை                                        
10.காலற்ற நாற்காலிப் பாறை          
11.இரட்டைலிங்கம்                                  
12.நாவலூற்று                                            
13.பசுகடை                                                  
14.பிலாவடி கருப்பு                                  
15.மூலிகைக் கினறு                                                
16.சுந்தரமகாலிங்கம் கோவில்           
17.சந்தன மகாலிங்கம் கோவில்  
18.ஆனந்தவல்லி 
19.காளிகா பெரும்காடு
20.காளிகா தீர்த்தம்
21.ஜோதிமரம்
22.வனதுர்க்கை
23.தவசிக்குகை
24.நவகிரக மலை
25.நெல்லிவனம்
26.வெள்ளைப்பிள்ளையா
27 .அடுக்குப்பாறை
28 .ஐஸ்பாறை
29.மூலிகைவனம்
30.முகரை வீங்கி மரம்
31.பெரிய மகாலிங்கம்  
32.பெரிய கல்திருவோடு
33.கோரக்கர் குண்டம்

நன்றி!!! அனைவரும் சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கத்தை தரிசிப்போம் ஆண்டவனின் அருளாசி பெறுவோம்..

No comments:

Popular Posts